பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை
இந்த உலகில் நீங்கள் அடையும் இன்பங்களை எல்லாம் பார்த்தால், அவை யாவும் ஒரு ‘வரி’ (tax) யுடன் வருவதைக் காண்பீர்கள். அந்த வரி தான் துன்பம். ஒவ்வொரு நிகழ்வும் எவ்வளவு இனிமையானதாக இருந்தாலும் இறுதியில் ஓர் வலியினை ஏற்படுத்துகின்றது. அதிக இன்பம், அதிக வலி. ஒரு நிகழ்வுக்கு ஏங்குவதும், காத்திருப்பதும் வலிதான். எதையாவது வேண்டும் என்பதற்குள், ஏற்படும் படபடப்பு வேதனை தரும். அதை அடைந்த பின், இழந்து விடுவோமோ என்னும் பயம் வேதனை மிகுந்தது. அது முடிந்து போனவுடன் அது தந்த இன்பத்தினைப் பற்றிய நினைவு வலி மிகுந்தது.
வலியும் அன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அன்பு ஏராளமான வலியினை ஏற்படுத்தும், அது போன்றே பிரிவும். ஒரு விருப்பம் என்பது மனதில் ஏராளமான அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவரை மகிழ்ச்சியுறச் செய்வது வலியை ஏற்படுத்தும். அவர்கள் மகிழ்வடைந்தார்களா இல்லையா என்பதை தெரிந்து புரிந்து கொள்வதும் வேதனையாகும். மற்றவரின் மனம் எப்படியிருக்கிறது என்று அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஆனால் அது சாத்தியமல்ல. ஏனெனில் உங்கள் மனதையே நீங்கள் இன்னும் அறிந்து கொள்ள வில்லை. ஆன்மீகப் பயிற்சிகளுக்கு நீங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும், அதுவும் வலியானதுதான். சான்றோர்களின் பார்வையில், இந்த உலகில் எதுவுமே வேதனையற்றது கிடையாது. இவ்வுலகில் அனைத்திலும் வலி என்பது வால் போன்று ஒட்டிக் கொண்டே இருக்கின்றது.
அனைத்திலும் வேதனை உள்ளது என்று அறியும்போது, என்ன செய்வது? அந்த வலியின் மூல காரணம் களையப் பட வேண்டும். வாழ்வில் இன்னும் வந்தடையாத வலி, எந்த வேதனை இன்னும் முளையிடவில்லையோ அது முன்னதாக ஆரம்பத்திலேயே கிள்ளிஎடுக்கப் பட வேண்டும். அதை எவ்வாறு செய்வீர்கள்? உங்கள் சூழலிலிருந்து நீங்கள் தனி என்பதை மறந்து விடுவதுதான் வேதனையின் முக்கிய காரணமாக அமைகின்றது. சரியாக அறியும் திறன் இல்லாமைதான் வேதனைக்குக் காரணம். மூன்று விஷயங்கள் உள்ளன. – சுயம், காண்பவர், காண்பது. மக்கள் தங்கள் வாழ்க்கையை தங்களுக்குள் வைத்துக் கொள்ளாமல் எங்கேயோ வைக்கின்றனர். சிலருக்கு வாழ்க்கை வங்கிக் கணக்கில் இருக்கின்றது. வங்கி மூடப்பட்டு விட்டால், அவருக்கு இதயம் செயலிழந்து விடுகிறது.
வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றீர்களோ, அது வேதனையை ஏற்படுத்து கின்றது. காண்பவர் காட்சியிலிருந்து வேறு பட்டவர் என்னும் அந்த வித்தியாசத்தை உணரும்போது அது வேதனையை அகற்ற உதவுகின்றது. தியானத்தின் மூலம், நீங்கள் இந்த உடல் அல்ல என்பதை அனுபவித்தறிந்து கொள்ளலாம். ஆனால் அதற்காக இந்த உலகிலிருந்து விடுபட்டு ஓடி விட வேண்டும் என்பதல்ல. இந்த உலகம் நீங்கள் இன்பம் அனுபவிப்பதற்காக இங்கேயுள்ளது.
ஆயினும் அவ்வாறு அனுபவிக்கும்போது, உங்களையே மறந்து விடாதீர்கள். நீங்கள் உங்களிலிருந்து தனிப்பட்டவர் என்றறிவதே விவேகம். இந்த உலகிலுள்ள ஒவ்வொரு அம்சமும் மெய்யுணர்வின் வெளிப்பாடு. ஒவ்வொன்றும் ஓர் செய்தியினை தெரிவிக்கின்றது. மெய்யுணர்வு எவ்வளவு சிறப்பானது என்பதைத் தெரிவிக்கிறது. செயல்படும் அனைத்தும் மெய்யுணர்விலிருந்து பகிரங்கப் படுத்தப் பட்டவையேயாகும். இந்த உலகில் அனைத்துமே மாறக் கூடியது. எதுவுமே நிலையானதல்ல. ஒரு மலை கூட நிலையானதல்ல. ஒவ்வொரு அணுவும் மாறக் கூடிய இயல்பு டையதாகும். அவை ஒரு பரிணாம வளர்ச்சியினை அடைகின்றன. அனைத்தும் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
இந்தப் படைப்பு முழுவதும் ஐந்து கூறுகளாலும் பத்து புலன்களாலும் உருவாக்கப் பட்டிருக்கின்றது. இந்த பத்துப் புலன்களில் ஐந்து எண்ணங்களுக்கானவை, மீதி ஐந்து செயல்களுக்கானவையாகும். இந்தப் படைப்பு முழுவதும், உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதற்காகவே உள்ளது. எது மகிழ்ச்சியை அளிக்கின்றதோ, அது நிவாரணத்தையும் அளிக்க வேண்டும். இல்லையெனில் அந்த இன்பமே வலியாகி விடும்.
உங்கள் உடல் மூன்று குணங்களால் ஆக்கப் பட்டிருக்கின்றது. அவை சத்வ ரஜஸ் மற்றும் தமஸ் என்பவையாகும். உங்கள் எண்ணங்களும் நடவடிக்கைகளும் இக்குணங்களுக்கேற்ப அமைகின்றன. தமஸ் குணம் சோர்வு, தூக்கம், சோம்பல் இவற்றை உருவாக்குகின்றது. ரஜஸ் குணம் அமைதியின்மை, ஆசைகள் வேதனை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது. ஆனால் மனதில் சத்வ குணம் மேலோங்கியிருக்கும்போது சந்தோஷம், எச்சரிக்கை மற்றும் உற்சாகம் இவை ஏற்படுகின்றன. இந்த மூன்று குணங்களும் அவற்றின் இயல்புக்கேற்ப உங்கள் உடலில் செயல்படும்போது, இந்த வேறுபட்ட பண்புகள் ஆதிக்கம் பெறுகின்றன.
ஆனால் சுயம் புத்தியுடன் அல்லது அறிவுடன் ஒன்றிணைவதாக உணர்ந்தால், அது சரியானதா என்னும் ஐயம் எழுகின்றது. உலகம் வேறுபாடுகளுடனேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஞானத்தில் விழிப்புணர்வு பெற்றவனுக்கு வேதனை எதுவுமில்லை, இந்த உலகமே வேறு விதமாகக் காட்சியளிக்கின்றது. அவனுக்கு இந்தப் படைப்பின் ஒவ்வொரு அங்குலமும் பேரின்பம் நிறைந்ததாக அல்லது சுயத்தின் ஒரு பகுதியாகவே தெரிகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு அது அவர்கள் காண்பதைப் போலவே இருப்பதாகத் தெரிகின்றது.
வலியின் மூல காரணத்தினைக் களைவதற்கு ஓர் நிச்சயமான புரிதல் தேவை. உடல், மனம், மற்றும் இந்த உலகம் முழுமையும் எப்போதும் மாற்றத்தினை மேற்கொண்டிருக்கின்றன. நான் இந்த உடல் அல்ல; நான் சுயம், நான் வெட்ட வெளி, நான் அழிவில்லாதது, தொட முடியாதது, சுற்றி இருக்கும் உலகினால் பாதிக்கப் படாதது, இந்த உடலில் உள்ள ஒவ்வொரு திசுவும் மாறிக்கொண்டிருக்கின்றது என்னும் நிச்சயமான ஞானம் மட்டுமே இந்தச் சுழற்சியிலிருந்து வெளி வரும் ஒரே வழி.