அனைத்திந்திய இஸ்லாமிய தனிப்பட்ட சட்ட வாரியத்திற்கு குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் வெளிப்படைக் கடிதம் | An Open Letter from Gurudev Sri Sri Ravi Shankar to the AIMPLB

India
6th of Mar 2018

உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

இந்தக் கடிதத்தின் மூலம் ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி பிரச்சினையின் தற்போதைய   நிலைமை மற்றும் வருங்கால சாத்தியம் ஆகியவற்றைப் பற்றிக் கூற விரும்புகிறேன். நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்துள்ளபடி, இது ஹிந்து மற்றும் இஸ்லாமிய  சமூகங்களிடையே  பழைய, மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகத் திகழ்ந்து வருகிறது. இப்போது இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் உள்ளது. ஒரு சமூகத்தை  தவிர்த்து, மற்றொரு சமூகத்தை ஆதரித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சாத்திய விளைவுகளைப் பற்றி நாம் ஆராய்வோம்.

முதல் சாத்தியம் என்னவெனில், மசூதிக்கு முன்பாகவே, கோயில் நீண்ட கால  மாக இருந்ததற்கான தொல்பொருள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்துக்களுக்கு அந்த இடத்தை வழங்குவதாக  நீதி மன்றம் அறிவித்தல். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நமது சட்ட அமைப்பு பற்றி இஸ்லாமியர்கள்  கடுமையான அச்சம் அடைந்து, இந்திய நீதித்துறை மீதான அவர்களுடைய நம்பிக்கை தகர்ந்து போகும். பல எதிர்விளைவுகளில் ஒன்றாக இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வழி வகுக்கக் கூடும்.

இஸ்லாமிய தனிப்பட்ட சட்ட வாரியம் மற்றும் பிற சமூகத் தலைவர்கள், ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் கூட,  இறுதியில் நீதிமன்றம் அவர்களது சமூகத்திற்கு அநீதி இழைத்து விட்ட உணர்வு பல நூற்றாண்டுகளுக்கு நிலவி வரும்.

இரண்டாவது விருப்பத் தேர்வு, பாபர் மசூதியை மறுசீரமைப்பதற்காக இஸ்லாமிய ருக்குப்  பரிசாக இந்த இடம் முழுவதும் வழங்கப் பட்டால் இந்துக்கள் தோற்று விடுவர். அது இந்து சமூகத்தில் மிகப் பெரிய மனக் கொந்தளிப்பை  ஏற்படுத்தும், ஏனெனில்  இது ஒரு நம்பிக்கை சம்பந்தப் பட்ட விஷயம்; மற்றும் 500 ஆண்டுகளாக இதற்குப் போராடி வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரும் இனக்  கலவரங்களை ஏற்படுத்தக்கூடும். இஸ்லாமியர் வெற்றியடைந்தாலும்,  கிராமங்களில் துவங்கி, பல  லட்சக் கணக்கான இந்துக்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் அவர்கள் இழக்க நேரிடும். இந்த ஒரு ஏக்கர் நிலத்தை வென்றெடுத்தாலும்,  பெரும் பான்மையினரின்  நல்லெண்ணத்தை நிரந்தரமாக இழக்கக் கூடும்.

மூன்றாவதாக, ஒரு ஏக்கரில் கட்டப்பட்ட ஒரு மசூதி இருக்க வேண்டும்; மீதமுள்ள 60 ஏக்கர் கோவிலைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும், என்று கூறும் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கிறது எனில், பாதுகாப்பு ஆபத்தைத் தவிர்க்க 50,000 போலீஸ் படையினர் அமைதி காக்க நியமிக்கப்பட வேண்டும். இதுவும் இஸ்லாமிய சமூகத்திற்கு நன்மையளிக் காது. உள்ளூர் இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை, அவர்களது பிரார்த்தனைக்கு அந்த மசூதி தேவைப்படவில்லை, ஏனெனில் அவர்களுக்கு இருபத்தி இரண்டு மசூதிகள் உள்ளன; ஐயாயிரம் பேர் மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இது இந்த விவாதத்தின் மற்றொரு அம்சம், மற்றும்  1992 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாபர் மசூதி தகர்ப்பு மீண்டும் நிகழ்வதற்கான ஒரு வாய்ப்பை நாம் அளிக்கிறோம். இது தொடர் மோதலுக்கு வழிவகுக்கும். இது ஒரு தீர்வே அல்ல.

நான்காவது  விருப்பத் தேர்வு  அரசாங்கம் ஒரு சட்டம் எடுத்து வந்து கோவிலைக் கட்டுவது என்னும் நிலையாகும். அந்த நிலையில் இஸ்லாமிய சமூகத்தினர் தாங்கள் தோற்று விட்டதாகவே கருதுவர்.

ஆகவே இந்த நான்கு விருப்பத் தேர்வுகளிலும்   நீதி மன்றம் அல்லது அரசாங்கம் என எதன் மூலமாக இருந்தாலும் விளைவு பெருமளவில் நாட்டிற்கு,  முக்கியமாக இஸ்லாமிய சமூகத்தினருக்கு பாதகமாகவே அமையும்.

இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றால், ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் கொண் டாடுவர். அது இனக் கலவரத்தையும் வன்முறையையும் ஏற்படுத்தும். அது போன்றே ஹிந்துக்கள் வெற்றி பெற்றால் அது இஸ்லாமியரின்  சீற்றத்தைத் தூண்டி, கடந்த காலத்தில் நாம் பார்த்திருக்கும்  கலவரங்களை நாடு  முழுவதிலும் ஏற்படுத்தும்.

நீதி மன்றத்தின் தீர்ப்பையே கடைப்பிடிக்க வேண்டும் என்று இரு  சமூகங்களிலும் பிடிவாதமாக உள்ள மக்கள்  இப் பிரச்சினையை ஒரு தோல்வி நிலைக்கே செலுத்துகின்றனர்.

என்னைப் பொறுத்த வரையில் சிறந்த தீர்வு என்னவெனில்,  நீதி மன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் விதமாக , இஸ்லாமியர்கள்  ஒரு ஏக்கர் நிலத்தை ஹிந்துக்களுக்குப் பரிசாக அளிக்க முன்வந்து, அதற்கு பதில் பரிசாக ஹிந்துக்கள்  இஸ்லாமியர்களுக்கு ஒரு பெரிய மசூதியைக் கட்டிக் கொள்வதற்கு அருகாமை யிலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை அளிப்பது ஆகும். இது இருதரப்பினருக்கும் வெற்றியளிக்கும் நிலை. இஸ்லாமியர்கள் நூறு கோடி ஹிந்துக்களின் நன்மதிப்பை அடைவது மட்டுமின்றி, அனைவருக்கும் தீர்வாக அமையும். இந்த கோவில்  ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியரின் ஒத்துழைப்போடு கட்டப்பட்டதாக ஒரு பலக் நாமா  அடையாளம் காணும். அது, வரவிருக்கும் பல நூற்றாண்டுகளில்  வருங்கால சந்ததியினருக்கு இப்பிரச்சினைக்கு முடிவாக அமையும்.

நீதிமன்றத்தின் வழியாக ஏற்படும் தீர்வு இரு சமூகத்தினருக்கும் இழப்பாகும். எனவே நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பது இரு தரப்பினருக்கும் வெற்றியாக அமையும் என்று  நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்.

தீவிரமாக இந்த நடவடிக்கையை  எடுக்கும்படி இரு சமயத் தலைவர்களையும் நான் தூண்டுகிறேன். இல்லையெனில், நாம்  ஒரு உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பிற்கு நமது நாட்டை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறோம். உலகம் ஏற்கனவே இதை அதிகமாக பார்த்திருக்கிறது. அதற்கு பதிலாக,  நமது உள் விவகாரங்களை நாமே இணக்கமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்று உலகிற்கு நாம் இந்தியாவை வித்தியாசமாக எடுத்துக் காட்டுவோம்.

குர்ஆன் இல் மசூதியை மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு அனுமதியுள்ளதா என்பது இப்போது பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு விடை ‘ஆம்’ என்பதாகும். மரியாதைக்குரிய மதகுரு மௌலானா சல்மான் நட்வி மற்றும் பல இஸ்லாமிய அறிஞர்களிடமிருந்து நான் தனிப்பட்ட முறையில் இதைக் கேட்டிருக்கிறேன். பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய மக்களுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கோ  அவர்கள் இந்த நிலத்தை சரண் அளிக்கப் போவதில்லை. மாறாக, அவர்கள் இந்திய மக்களுக்கு அதைப் பரிசாக அளிக்கின்றனர். அவர்கள் தங்கள் மனதிலும் மெய்யிலும்  இதை வைத்திருக்க வேண்டும். சரணடைதல் என்பதே இல்லை. அது சமரசம் மற்றும் அவர்களது பரந்த  மனப்பான்மை, ஈகை,  தயாளம்  மற்றும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கிறது.

உச்ச நீதிமன்றமே   மோதலை நீதிமன்றத்திற்கு வெளியே  தீர்த்துக் கொள்வதற்கு பரிந்துரைத்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்வோம். சிறு அரசியல், மற்றும்  உணர்ச்சிகள் ஆகியவற்றுக்கு மேலாக,  நாட்டின்   நலனை முதன்மையாகக் கருதி, இரு சமூகத்தினரிடையே நம்பிக்கை, அன்பு, சகோதரத்துவம் ஆகியவை செழித்து வளர அனுமதித்து, இந்த விருப்பத் தேர்வுகளை பற்றிச் சிந்திக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

 

இதய பூர்வமான வாழ்த்துக்களுடன்,
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

 

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தின் மூலப் படிவம் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.