ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் என்றால் என்ன?
ஆயுர்வேதம் இந்தியாவின் ஓர் பழமையான இயற்கை மற்றும் முழுமையான மருத்துவ முறை. சமஸ்க்ருதத்திலிருந்து பெயர்க்கப் பட்ட பட்ட இச்சொல் “வாழ்க்கை அறிவியல்" என்னும் பொருள் கொண்டதாகும்.( ஆயுர் என்றால் நீண்ட வாழ்நாள்; வேதம் என்றால் அறிவியல்)
ஆங்கில மருத்துவ முறை ஒரு நோயின் மேலாண்மையின் மீது கவனம் வைக்கிறது. ஆயுர்வேதம் எவ்வாறு நோயை தடுப்பது; நோயுற்றால் அந்த நோயின் ஆணிவேர் காரணத்தைக் களைவது ஆகிய விஷயங்களை நமக்கு அளிக்கிறது.
முக்கியக் கொள்கைகள்:
ஆயுர்வேத ஞானம் வாய்மொழி மூலமாக பல முனிவர்கள் மூலம் இந்தியாவில் வழிவழியாக வந்து கொண்டிருந்தது. சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவை தொகுக்கப் பட்டு எழுதப்பட்டன. ஆயுர்வேதத்தின் தொன்மையான நூல்கள் சரக சம்ஹிதா , சுஷ்ருத சம்ஹிதா, அஷ்டாங்க ஹ்ருதயா ஆகியவை. பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்க்கையில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை அடைய ஒவ்வொரு தனி மனித அமைப்பில் அமைந்துள்ள ஐந்து கூறுகளான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை சமநிலைப் படுத்தப் பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. ஆயுர் வேதத்தின் படி, ஒவ்வொரு மனிதனும் சில கூறுகளின் தாக்கத்தைப் பெற்றிருப் பான். ஒருவரது பிரகிருதி அல்லது இயல்பான அமைப்பே இதற்கு காரணம். ஆயுர்வேதம் பல்வேறு விதமான அமைப்புக்களை மூன்று விதமான தோஷங்களாக வகைப் படுத்துகிறது.
- வாத தோஷம். இதில் காற்று மற்றும் ஆகாயத்தின் தாக்கம் அதிகமிருக்கும்.
- பித்த தோஷம்: நெருப்பின் தாக்கம் மேம்பட்டிருக்கும்.
- கப தோஷம்: நிலம் மற்றும் நீரின் தாக்கம் அதிகமிருக்கும்.
இந்த தோஷங்கள் வெறும் உடல் அமைப்பை மட்டும் தாக்காமல், உடல் கூறு களையும் ( உணவு விருப்பங்கள், ஜீரணம் போன்றவை ) அவரது மனம், மற்றும் உணர்ச்சிகளையும் பாதிக்கின்றன. உதாரணமாக கப தோஷமுள்ள ஒருவரிடம் நிலத்தின் தன்மை அவரது வலிமையான உடல்கட்டு, மெதுவான ஜீரண சக்தி, சிறந்த நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிகளின் நிலைத்த தன்மை ஆகியவற்றில் வெளிப்படும். பெரும்பாலானோரின் பிரகிருதி இரண்டு தோஷங்களின் கலவையாகவே அமைந்திருக்கும். உதாரணமாக , பித்த கப தோஷமுள்ளவர்கள் பித்த தோஷம் மற்றும் கப தோஷம் ஆகிய இரண்டையும் பெற்று, பித்தத்தின் ஆதிக்கத்தைப் பெற்றிருப்பர். நமது இயல்பான அமைப்பின் குணங்களை புரிந்து கொள்வதன் மூலம் நம்மைச் சமநிலையில் வைத்துக் கொள்ள தேவையானவற்றை நாம் செய்து கொள்ள முடியும்.