பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை
இந்த உலகில் ஒவ்வொரு அம்சத்திற்கும் மெய்யுணர்வின் வெளிப்பாடு உண்டு. உலகில் அனைத்தும் மாறக் கூடியது. ஒரு மலை கூட நிலையானதல்ல. இயற்கையிலுள்ள ஒவ்வொரு அணுவும் மாறக் கூடியது. அவை அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் சில நிலைகளை மேற்கொள்கின்றன.
இந்தப் படைப்பு முழுவதும் ஐந்து கூறுகளாலும் பத்துப் புலன்களாலும் உருவாக்கப் பட்டிருக்கின்றது. இந்த பத்துப் புலன்களில் ஐந்து எண்ணங்களுக்கானவை, மீதி ஐந்து செயல்களுக்கானவையாகும். இந்தப் படைப்பு முழுவதும், உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதற்காகவே உள்ளது. எது மகிழ்ச்சியை அளிக்கின்றதோ, அது நிவாரணத்தையும் அளிக்க வேண்டும். இல்லையெனில் அந்த இன்பமே வலியாகி விடும். ஓர் உதாரணம் தருகின்றேன். உங்களுக்கு ஆப்பிள் இனிப்புத் தின்பண்டம் (Apple Pie) மிகவும் பிடிக்கும். ஆனால் அதில் ஐந்தினை உண்பது சற்று அதிகம். மகிழ்ச்சியை அளிக்கும் அந்தத் தின்பண்டம் உங்களை வேதனைப் படுத்துகின்றது. இந்தப் படைப்பு முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியையும் விடுதலையையும் அளிக்கின்றது. அனைத்திலிருந்தும் ஒரு கால கட்டத்தில் உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் இன்பமே துன்பமாகி விடும்.
இந்த உலகம் ஞானிகளுக்காக மட்டுமல்ல, ஞானமற்றவருக்காகவும்தான், இவ்வுலகம் எதிர் மாறானவைகளுடனேயே தொடர்ந்து இருந்து கொண்டு வருகின்றது. ஞான விழிப்புடன் இருப்பவர்களுக்குத் துன்பம் இல்லை. இவ்வுலகமே அவர்களுக்கு வித்தியாசமாகத் தெரிகின்றது. இந்தப் படைப்பின் ஒவ்வொரு அங்குலமும் பேரின்பமாக அல்லது சுயத்தின் ஒரு பகுதியாகவும் தெரிகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு அது அவர்கள் எவ்வாறு காண்கின்றார்களோ அவ்வாறு தெரிகின்றது.
உங்கள் உடல் மூன்று குணங்களால் ஆக்கப் பட்டிருக்கின்றது. அவை சத்வ ரஜஸ் மற்றும் தமஸ் என்பவையாகும். உங்கள் எண்ணங்களும் நடவடிக்கைகளும் இக்குணங்களுக்கேற்ப அமை கின்றன. தமஸ் குணம் சோர்வு, தூக்கம், சோம்பல் இவற்றை உருவாக்குகின்றது. ரஜஸ் குணம் அமைதியின்மை, ஆசைகள், வேதனை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது. ஆனால் மனதில் சத்வ குணம் மேலோங்கியிருக்கும்போது சந்தோஷம், எச்சரிக்கை மற்றும் உற்சாகம் இவை ஏற்படுகின்றன. இந்த மூன்று குணங்களும் அவற்றின் இயல்புக்கேற்ப உங்கள் உடலில் செயல்படும்போது, இந்த வேறுபட்ட பண்புகள் ஆதிக்கம் பெறுகின்றன.இந்த இயல்புகள் உங்களிடம் தோன்றும் போது அவற்றைக் கவனியுங்கள், நீங்களே அந்த இயல்புகள் என்று எண்ணாதீர்கள்.
ஓர் கதை உள்ளது. ஒரு முனிவர் இமய மலையில் வசித்து வந்தார். அவருக்கும் எங்கும் தடையின்றிச் செல்லும் நிலை இருந்தது. மக்கள் அவரை மிகவும் நேசித்து வரவேற்றனர். தினமும் அவர் அரசரின் அரண்மனைக்குச் சென்று மதிய உணவு அருந்தினார். அங்கு அவருக்கு மகாராணி தங்கத் தட்டில், உணவு பரிமாறுவதுண்டு. அவர் உணவினை ஏற்றுக் கொண்டு சென்று விடுவார். ஒரு நாள், உணவு முடித்த பின்னர், ஒரு வெள்ளிக் கிண்ணத்தையும், தங்கக் கரண்டியையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அவை தனக்கு வேண்டும் என்று கூட யாரிடமும் கூற வில்லை. அரண்மனையிலிருந்தவர்கள் மிகுந்த வியப்படைந்தனர். " முனிவருக்கு என்னவாயிற்று ? இது போன்று எதையுமே இதுவரையில் எடுத்துச் சென்றதில்லையே? இன்று மட்டும் என்ன? யாரிடமும் எதுவும் கூறக் கூட இல்லையே? என்று வியந்தனர். மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர், அந்தப் பொருட்களைத் திரும்ப எடுத்து வந்தார். அது மேலும் வியப்பினை அளித்தது. அரசர், அனைத்து அறிஞர்களையும் அழைத்து, முனிவரின் நடத்தையினை ஆராயுமாறு கூறினார். அறிஞர்களும் பண்டிதர்களும் சம்பவ தினத்தன்று, முனிவருக்கு என்ன உணவு அளிக்கப் பட்டது என்று விசாரித்தனர். அவர்கள், அன்றைய தின உணவு, திருடர்/கொள்ளைக் காரரிடமிருந்து பறிக்கப் பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப் பட்ட உணவு என்று கண்டறிந்தனர். அதுவே அவரைத் திருடவும் வைத்தது !
எனவே வலியின் மூல காரணத்தை அகற்றுவதற்குச் சரியான புரிதல் மிக அவசியம். உடல், மனம், மற்றும் இந்த உலகம் முழுமையும் எப்போதும் மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றன.இந்தப் பிரபஞ்சமே திரவத்தன்மை வடிவில்தான் உள்ளது. திட்டவட்டமான ஞானம் என்னவென்றால், " நான் இந்த உடல் அல்ல" “ நான் சுயம், நான் வெட்ட வெளி, என்னைச் சுற்றியுள்ள உலகினால் அழிவற்றதும், தீண்டப்படாததும் பாதிக்கப் படாததும் ஆவேன். இந்த உடலின் ஒவ்வொரு அணுவும் மாறிக் கொண்டிருக்கின்றது, மனமும் மாறிக் கொண்டிருக்கின்றது.
இந்தச் சுழற்சியிலிருந்து வெளி வர இந்த திட்டவட்டமான ஞானம் மட்டுமே ஒரே வழி.