பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை
உங்களை யாரும் விரும்பவில்லையென்று நீங்கள் எண்ணினால், நீங்கள் விரும்பப் படுகிறீர்கள் என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த பூமி உங்களை விரும்புகிறது, அதனால்தான் அது உங்களை நேராக நிற்க வைக்கின்றது. பூமியின் அன்பு அதன் புவியீர்ப்புத்தானத்தில் உள்ளது. காற்று உங்களை நேசிக்கிறது. அதனால்தான் அது நீங்கள் தூங்கும்போது கூட, உங்கள் நுரையீரல்கள் வழியாகச் சென்று கொண்டிருக்கின்றது. இறைமை உங்களை மிகப் பிரியத்துடன் ஆழமாக விரும்புகின்றது. இதை கண்டறிந்தவுடன் நீங்கள் ஒருபோதும் தனிமையாக உணர மாட்டீர்கள்.
ஒருவரது சகவாசம் உங்களது தனிமையை இட்டு நிரப்பாது. அவ்வாறு செய்தாலும் அது குறுகிய கால அளவிலேயே இருக்கும். கூட எத்தனை பேர் இருந்தாலும் நீங்கள் தனிமையாக உணரலாம். உண்மையில், தனிமை என்பது தனியாக இருப்பதன் மூலமே இட்டு நிரப்பப் படும். சற்று நேரம் தனியாக இருப்பது மிகவும் இதமாக இருந்தால், நீங்கள் தனிமையாக உணரவே மாட்டீர்கள். தனிமையாக உணராமல் இருந்தால்தான் நீங்கள் மகிழ்ச்சியினை உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்குப் பரப்ப முடியும்.
மக்கள் விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் செல்ல வேண்டும் என்று அவற்றின் பின் ஓடுகின் றனர். ஆனால் யார் அவற்றின் பின் ஓடாமல் இருக்கின்றனரோ அவர்கள் பின்னால் விருந்துகளும் விழாக்களும் ஓடிவரும். விழாக்களுக்குப் பின்னால் ஓடினால் தனிமை ஏற்படும், இருப்பில் தனியாக நிலைபெற்றால், விழாக்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்.
உங்களுடைய உயிர் இருப்புடன் நீங்கள் ஆனந்தமாக ஒன்றியிருந்தால், நீங்கள் ஒரு சலிப்பான நபராக இருக்க மாட்டீர்கள். தனிமையாக உணர்ந்தால் நீங்கள் பிறருக்கு சலிப்பாகி விடுவீர்கள். அது மேலும் உங்களைத் தனிமைப் படுத்தும். உங்களுடைய சொந்த சகவாசமே உங்களுக்கு சலிப்பாக இருந்தால், பிறருக்கு நீங்கள் எவ்வளவு சலிப்பாக ஆவீர்கள்?
எப்போதுமே நிறையப் பேர் சூழ்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், தனிமையின் சுகம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். எப்போதும் தனியாக இருப்பவர்களுக்குத் தனிமையால் பிறருடைய சகவாசம் தேவையாக இருக்கின்றது. எல்லோருக்குமே மிகச் சரியான சமநிலை தேவையாக இருக்கின்றது. அந்த சமநிலை என்பது ஒரு கத்தி முனை போன்றது. அது தனக்குள்ளேயேதான் கிடைக்கும். ஆண்டுக்கொருமுறை, ஒரு வாரம் நேரம் எடுத்துக் கொண்டு, உங்களுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் கவனித்துப் பாருங்கள், அப்போது அமைதியான மௌன நிலை என்பது பற்றி அறிந்து கொள்வீர்கள்.
அவ்வப்போது நெருக்கமானவர்களிடமிருந்து சற்று விலகி, உங்களுக்கென்று சற்று நேரம் ஒதுக்குங்கள். காலையில் விழித்தெழுந்தது முதல், எப்போதுமே நீங்கள் பிறருடன் இருக் கின்றீர்கள். உங்கள் மனம், உலக வாழ்வியல் எண்ணங்களிலேயே சிக்கிக் கிடக்கின்றது. எனவே, ஒரு நாளில் சில நிமிஷங்கள் அமைதியாக அமர்ந்து உங்கள் மனக் குகைக்குள் செல்லுங்கள். அப்போது நீங்கள் தனியாக இருந்தாலும் தனிமையாக உணர மாட்டீர்கள்.
உங்கள் வாழ்க்கையை நன்றாக வாழுங்கள். நீங்கள் பிறருக்குப் பயனுள்ளவராக இருந்தால் நூற்றுக் கணக்கானோர், மில்லியன் கணக்கானோர் உங்களைக் கவனித்துக் கொள்வார்கள். அன்னை தெரேசா மற்றும் வினோபா பாவே ஆகியோர் வெகு நாட்களுக்கு நோயுற்றுப் படுக்கையில் இருந்தனர். அவர்களை யாரும் கவனிக்கவில்லையென்றா எண்ணுகின்றீர்கள்? நூற்றுக் கணக்கானோர் அவர்களைக் கவனிக்கக் காத்திருந்தனர். ஏனெனில் அவர்கள் இருவரும் பிறருக்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருந்ததுதான்.
தொண்டு செய்தல் உங்கள் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்றிருந்தால், அது பயத்தினை விலக்கி, உங்கள் மனதிற்கு கவனம், செயலுக்கு நோக்கம், மற்றும் நீண்ட கால மகிழ்ச்சி ஆகியவற்றைத் தரும். நீங்கள் மகிழ்ச்சியின்றியோ, துன்பமாகவோ, அல்லது தனிமை யாகவோ உணரும் ஒவ்வொரு தருணத்திலும், நீங்கள் உங்கள் எல்லைகளைத் தொட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். எல்லைக் கோடு என்பதுதான், உங்களுடைய தொந்தரவுக்கு உண்மையான காரணம், அதுவே வரையறையையும் ஏற்படுத்துகின்றது. உங்கள் எல்லைகளுடன் தொடர்பு ஏற்படும் வரையில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கின்றீர்கள். தொடர்பு ஏற்படும் தருணத்தில், உங்கள் மனம் உங்கள் மையத்திலிருந்து விலகி அலையத் துவங்குகின்றது. அந்த நேரத்தில், நீங்கள் நன்றியுடன் அமைதியை நாடிப் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த க்ஷணத்திலேயே நீங்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் புன்முறுவலுடன் அதைக் கடக்கத் துவங்குவீர்கள்.