ஒருவேளை நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது, உறங்கும் வேளையில் இவர்களை பற்றிய கதைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் கவனம் எடுத்துக் கற்று அதனை தங்கள் சாதனைகள் மூலம் முன்மாதிரியாக எடுத்து வந்தவர்கள். இங்கே தங்கள் காலத்தில் சிறந்த மாணவர்களாக விளங்கிய அத்தகைய ஐந்து பேரைப் பற்றிய விபரங்கள் :
ஏகலைவன்
ஏகலைவன் துரோணாச்சார்யாரிடமிருந்து வில்வித்தை கற்று கொள்ள வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அவர் நிராகரித்து விட்டார். இதனால் மனம் தளராத ஏகலைவன், மண்ணால் துரோணாச்சார்யாரின் சிலையை வடிவமைத்து அதையே குருவாகக் கருதினான். சீரான பயிற்சி மற்றும் பக்தியால் வில்வித்தை கற்று, துரோணாச்சார்யாரின் விருப்பத்திற்குரிய சீடனான அர்ஜுனனையும் விட சிறந்தவனாக விளங்கினான். துரோணாச்சாரியார் குருதக்ஷிணை கேட்டபோது தன்னுடைய கட்டை விரலையே சற்றும் தயக்கமின்றி அளித்தான்.
அர்ஜுனன்
குருகுலத்தில் படிக்கும் போது, குரு துரோணாச்சாரியார் தனது சீடர்கள் ஒவ்வொருவரையும் அருகிலுள்ள மரத்தில் அவர்களால் பார்க்க முடிந்தது என்ன என்று கேட்டார். சிலர் இலைகள் மற்றும் பழங்கள் என்று கூறிய போது, அர்ஜுனன் மட்டுமே ஒரு மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பறவையின் கண்ணைப் பார்க்க முடிந்ததாகக் கூறினான். இந்த கதை தனது குழந்தை பருவத்திலிருந்தே அர்ஜுனன் எவ்வளவு கவனத்துடன் இருந்தான் என்பதையும் அதனால் துரோணாச்சாரியாரின் விருப்பத்திற்குரிய சீடனாக விளங்கினான் என்பதையும் காட்டுகின்றது.
குரு பூர்ணிமா தினம் உங்களது ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு நன்றி செலுத்தும் நாள்.இந்தப் பாரம்பரியத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழே க்ளிக் செய்யுங்கள்.
சூர்தாஸ்
கோபத்தைத் தாண்டி ஆன்மீக வழியில் வளர்ச்சி பெற, சூர்தாஸின் குரு, அவரை இறைவன் நாமத்தை ஒரு மாத காலம் ஜபித்து, பின்னர் நீராடி விட்டுத் தன்னிடம் வருமாறு பணித்தார். இதை முடித்து குருவிடம் வருவதற்கு முன்னர், தனது துணிகளை அழுக்காக்கி விட்ட பெருக்குபவர் மீது கோபம் கொண்டதால் சூர்தாஸ் இரண்டு முறை தவறி விட்டார். மூன்றாவது தடவை அதே போன்று பெருக்குபவர் குப்பையை அவர் மீது வீசியபோது, அமைதியாக இருந்து வெற்றி கண்டார். இவ்வாறு சூர்தாஸ் ஆன்மீகப் பாதைக்குத் தடையாக இருந்த கோபத்தை வென்றார்.
ஸ்வாமி விவேகானந்தர்
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட நரேந்திரநாத் தன்னுடைய உலக வாழ்வினைத் துறந்து உள் ஆழ அறைகூவலை செவிமடுக்கும் முன்னர், தனது குடும்பம் உண்ணவும் உடையணியவும் தேவையான அளவு வசதி பெற வேண்டும் என விரும்பினார். ஒவ்வொரு முறையும் தெய்வத்திடம் வேண்டியதைக் கேட்கும் நிலை எழுந்தபோது நரேந்திர நாத் மிக உயரிய ஆன்மீக ஞானத்தையே வேண்டினாரன்றி வேறெதுவும் கேட்கவில்லை. இந்நிலையை உருவாக்கியவர் அவரது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரே ஆவார். இறுதியில் இது தன்னுடைய குருவின் திட்டம் என்பதை அறிந்து, தனது குடும்பம் இறைவனால் நன்றாகக் கவனித்துக் கொள்ளப் படும் என்பதையும் கண்டுணர்ந்தார். நரேந்திர நாத் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவரான ஸ்வாமி விவேகானந்தர் என ஆனார்.
சத்ரபதி சிவாஜி மஹராஜ்
மாராத்தியர்களின் இளவரசனான சிவாஜி, தனது குருவான சாம்ராத் ராம்தாஸ் சுவாமியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இளவரசன் மீது குருவின் அன்பினைக் கண்டு பிற சீடர்கள் பொறாமை கொண்டனர். எனவே அவர்களுக்கு குரு தகுந்த பாடம் கற்பிக்க விரும்பினார். தனக்கு உடல்நலன் சரியில்லை என்றும் அது குணமாக புலிப்பால் வேண்டுமென்றும் சிவாஜியிடம் கூறினார். சிவாஜி காட்டிற்குச் சென்று இரண்டு குட்டிகளுடன் இருந்த ஓர் பெண் புலியைக் கண்டு அதனிடம் தனது குருவுக்காக பால் தருமாறு வேண்டினார். புலியும் அதற்கு இசைந்து பாலை அளித்தது. இளவரசன் சிவாஜி புலிப்பாலுடன் குருவிடம் வந்தார். இத்திறமையைக் கண்டு பிற சீடர்கள் பணிந்தனர்.