பொங்கல் பண்டிகை, தமிழ் நாடு விவசாயிகளால் முதன்மையாக கொண்டாடப் படும் ஒரு அறுவடை திருநாள். இந்தியாவின் வடக்கில் பஞ்சாப் விவசாயிகள், அவர்களது லோஹிரி கொண்டாட்ட தீயின் இறுதி தனலை அணைக்கும் பொழுது, கீழே தெற்கில் தமிழ் விவசாயிகள், அவர்களது நான்கு நாள் பொங்கல் திருவிழாவினை கொண்டாட தயாராகின்றனர் .
பொங்கல்? பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு சேர்த்து, நாவில் நீர் ஊற வைக்கும் இனிப்பு வகை அல்லவா அது? நீங்கள் சரியாக சொன்னீர்கள்!
பொங்கல் ஒரு பாரம்பரிய உணவு போல, பொங்கல் திருநாளும், தமிழரின் பண்பாட்டு அறுவடை திருவிழா ஆகும்.
இந்தியா எவ்வகையான நாடு என்றால், அதன் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திலும், வெவ்வேறு வகையான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொண்டாடி கொண்டிருக்கும் நாடாகும். அதனால் நீங்கள் கர்நாடகாவில் அல்லது கேரளத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நம் பக்கத்து மாநிலமான தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை பற்றி தெரியாமல் இருக்கிறோம்.
மகர சங்கராந்தியும் அதே நேரத்தில் தான் கொண்டாடப் படுகிறது. இந்தியா முழுவதிலும் மகர சங்கராந்தியாக அறியப் பட்டாலும் பஞ்சாப் மற்றும் வேறு சில மாநிலங்களை போல, தமிழ் நாட்டில், இந்த பொங்கல் திருநாளான, அறுவடை திருநாள் முதன்மை பெறுகிறது. தமிழ் நாடு முழுவதும் இந்த உழவர் (அறுவடை) திருநாளை நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
2021 இன் பொங்கல் விழா எப்பொழுது?
பொங்கல் திருநாள், தமிழ் மாதங்களில், தை மாத முதல் நாள், ஆங்கிலதில் ஜனவரி மாத மத்தியில் (ஜனவரி 14 - 17 ) கொண்டாடப் படுகிறது. அதனால் தான் இதனை "தை திருநாள் " என்றும் அழைப்பார்கள். மார்கழி மாத இறுதி நாளும், பொங்கல் திருநாளின் முதல் நாளில் " போகி பண்டிகை " கொண்டாடப் படும். அந்நாளில், வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள், பின்னர் வரும் மூன்று நாட்களும் பொங்கல் திருநாளாகவும், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
இதில், பருவ கால அறுவடைப் பயிரான நெல் (அரிசி) , கரும்பு, மஞ்சள், போன்றவை இந்த வழிபாட்டில் முதன்மை பங்கு வகிக்கிறது.
"பொங்கல்" எனும் வார்த்தை எவ்வாறு தோன்றியது?
பொங்கல் என்றால், மிகவும் கொதித்து, மீறி வழிதல், அதாவது பொங்கி வழிதல். விவசாயிகள் அவர்களின் உழைப்பின் பயனை. அறுவடையில் பெறும் போது, அதற்கு உதவியாய் இருந்த சூரிய பகவான், மண், நீர், மாடு இவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக, அவர்களின் மனம் நன்றியுணர்வில் பொங்குவதை, மண் பானையில், நீர் மற்றும் பால் விட்டு, புது அரிசியை போட்டு, அது பொங்கி வழிவதை, சூரிய பகவானுக்கு காணிக்கையாக்கி பொங்கல் என கொண்டாடத் துவங்கினர்.
பொங்கல் சங்க காலத்தில் இருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழரின் பண்பாடாக இருந்து வருகிறது. இப்போது தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த நான்கு நாட்கள், எவ்வாறு இதை கொண்டாடுகிறார்கள் எனப் பார்க்கலாம்.
முதல் நாள் : - போகி பண்டிகை
இது பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப் படுகிறது. "போகி" என்றால் "வளமான அறுவடை" எனப் பொருள். ஒரு நல்ல விளைச்சல், மிகச்சரியான மழையைப் பொறுத்ததே. அதனால், விவசாயிகள் மழை கடவுளான வருண பகவானாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.
இந்நாளில், வீடுகளுக்கு வெள்ளையடித்து ( புது வர்ணம்) , கோலங்கள் (பச்சரிசி மாவினால் போடப்படும் ரங்கோலி ) வரைந்து, காவி (சிகப்பு வர்ணம் ) பூசி அலங்கரிப்பார்கள். விவசாயத்துக்கு பயன்படுத்தப் பட்ட ஏர், கலப்பை, மண்வெட்டி போன்றவைகளை சுத்தம் செய்து சந்தன குங்குமம் இடுவர்.
மேலும் இன்று ,மக்கள் அவர்களின் வேண்டாத பழைய பொருட்களையும், மார்கழி மாதம் முழுவதும், கோலத்தில் அலங்கரித்த மாட்டு சாணி உருண்டைகளையும், காய்ந்த பூசணி பூ சருகுகளையும் தீயில் போட்டு கொளுத்துவர். அது குளிர்கால முடிவில், மக்களின் இதயத்திற்கும், உடலுக்கும் கதகதப்பை தரும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என, பழைய எண்ணங்கள், கவலைகள் அழிந்து, புதிய விஷயங்கள் மலர்வதே இதன் தாத்பர்யமாகும்.
இரண்டாம் நாள்: - பொங்கல்
இன்று தான் மிக முக்கியமான நாளாகும். இன்றைய நாள், இந்த உலகில் உயிர்களை வாழ வைக்கும், சூரிய பகவானுக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. வளமான விளைச்சலுக்கான நன்றியறிதலாகவும் விளங்குகிறது.
மக்கள், அதிகாலையில் எழுந்து, குளித்து, வீட்டை கோலங்களால் அலங்கரிப்பர்
பின்னர் பொங்கல் பொங்கி, கரும்பு, மஞ்சள், இஞ்சியுடன் சூரியனுக்கு படையலிடுவர். வாசலில், அடுப்பு வைத்து மண் பானையில், இஞ்சி மஞ்சள் இலைகளை கட்டி, நீர், பால், பச்சரிசி வெல்லம் சேர்த்து, பொங்கல் பொங்கி வரும் போது, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக "பொங்கலோ பொங்கல்" என மகிழ்ச்சியில் குலவை இடுவார்கள்.பின்னர் கரும்புடன், வாழை இலையில் பொங்கல் படைத்து, சூரியனை வணங்கி, மகிழ்வார்கள்.
மூன்றாம் நாள்: - மாட்டுப் பொங்கல்
இன்றைய தினம், உழவுக்கும், விளைச்சலுக்கும் உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாகும். மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மலைகள், மணிகள் கொண்டு கழுத்தை அலங்கரித்து. நெற்றியில் சந்தன குங்குமம் வைத்து, நாம் அன்றாடம் உண்ணும் உணவுக்கு தேவையான தானியத்தை விளைவிக்க உதவிய மாடுகளை வணங்கி, அதனை ஊர் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடுவார்கள்.
இன்று தான், நம் பாரம்பரிய காளை மாடுகளின் "ஜல்லி கட்டு " விழாவும் நடைபெறும். இதில் வீரர்கள் ஓடி வரும் காளைகளை அடக்கி பிடித்து பரிசு பெறுவார்கள், இன்றைய தினம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறியடி ( கண்களை கட்டி கொண்டு, மேலே தொங்கும் பானையை உடைத்தல்) கோலப் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி என விளையாடி மகிழ்வார்கள். இது மக்கள் ஒருவரோடு ஒருவர் விட்டுக்கொடுத்து, இணைந்து மகிழும் அன்பிற்கான நாளாகிறது.
இன்று தென்னிந்திய ரக்ஷாபந்தன், இன்று தங்கைகள் அவர்களின் தமையன்கள்( அண்ணன்) நெடுநாள் வாழ்விற்கும், செல்வ வளத்திற்கும் இறைவனை பிரார்த்தித்து கொண்டு, மஞ்சள் செடியின் இலையில் சர்க்கரை பொங்கல் உடன் மஞ்சள் குங்குமம் கலந்து கையால் கொழுக்கட்டைகளாக பிடி செய்து, காகத்திற்கு வைப்பர். இதை " காணுப் பிடி" என்வும் கூறுவார்கள். இதை மணமான பெண்கள் தங்கள் பிறந்த வீட்டிற்காக செய்யும் ஒரு பிரார்த்தனை ஆகும்.
இது பெண்களின் பிறந்த வீட்டு பற்றுதலையும் பாசத்தையும் மேம்படுத்த அமைக்க பட்டதாக அர்த்தமாகிறது. சில கிராமப்புறங்களில், இன்றும் திருமணம் ஆகாத பெண்களை நடுவில் உட்கார வைத்து மணமான பெண்கள், கும்மி கொட்டி, பாட்டு பாடுவார்கள். இதனால் அந்த பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்புகின்றனர்.
நான்காம் நாள் : - காணும் பொங்கல்.
"காணும்" என்றால், "பார்ப்பது" , இன்று அனைவரும் அவரவர் சொந்தங்களோடும், அருகில் வசிப்பவரோடும், ஒன்றாக ஒரு பொது இடத்தில கூடி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாடுவார்கள்.
மேலும் இந்த பொங்கல் வந்ததற்கான காரணங்களாய் சில கதைகளும் இருக்கின்றன.
பொங்கல் கொண்டாடுவதற்கான புராண கதைகள்:
1. ஏன் பொங்கலின் முதல் நாள், வருண பகவானாகிய இந்திரனுக்கான நாளாகிறது?
பண்டைய காலத்தில் மக்கள், இந்திரனுக்கு (தேவர்களுக்கு அதிபதி) முக்கிய இடத்தையும் பெருமையையும் தந்திருந்தனர். அதனால் இந்திரனுக்கு அகம்பாவம் அதிகரித்தது. அவனே அனைத்து கடவுளருக்கும் மேல் எனவும், சக்தி மிகுந்தவன் என எண்ணத் தொடங்கினான். பகவான் கிருஷ்ணர், அவனின் அகம்பாவத்தை அடக்கி, பாடம் புகட்ட எண்ணினார். அதனால் மக்கள் அனைவரையும், இந்திரனுக்கு பதிலாக கோவர்த்தன மலையை வழிபட கூறினார்.
2. ஏன் மூன்றாம் நாள் மாடுகளுக்கான நாளாக கொண்டப்படுகிறது?
ஒருமுறை சிவன் அவர் வாகனமாகிய நந்தி தேவரிடம், பூலோகத்திற்கு சென்று, மக்கள் அனைவரையும் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதத்திற்கு ஒருமுறை உணவு உண்ணுமாறு சொல்ல சொல்லி அனுப்பினார். எப்பொழுதும் நடக்கும் தகவல் பரிமாற்ற தவறு போல, நந்தியும் மக்களிடம் தினமும் உணவு உண்டு, மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க கூறி விட்டார்.
அதனால் சிவபெருமான் மிகவும் கோபமுற்றார். மக்கள் தினம் உணவு உண்ண தொடங்கினால், தானியங்களுக்கு பற்றாக்குறை வரும் என உணர்ந்து, மக்களின் வயல்களில், தினமும் உழுது பயிர்களை விளைவிக்க நந்தி தேவருக்கு சாபமிட்டார். அதனாலேயே , மாடுகள் விவசாயத்திற்கும், தானியங்களுக்கும் தொடர்பு கொண்டதாயிற்று. அவைகளை மதிக்கும் விதமாகவே மூன்றாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது.
நாம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்ததில், கொண்டாட்ட வழக்கங்கள் சிறிது மாறியிருந்தாலும், இன்னும் அது மிக பெரும் மகிழ்ச்சியான திருவிழாவாக தான் இருக்கிறது. இந்தியா ஒரு வேளாண்மை நாடாக திகழ்வதால், இந்த பண்டிகை மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.
எப்படி இருந்தாலும், என்னை கேட்டால், பொங்கல் திருநாளை (உழவர் திருநாள்) முழுமையாக அனுபவிக்க, உழவர்கள் வாழும் தமிழ் நாட்டின் கிராமபுரங்களுக்கு சென்று, இந்த இயற்கையின் மணத்தோடு, பருவங்களின் வண்ணங்களில், மலர்களின் நறுமணத்துடன், உங்கள் சுவையுணர்வை கூட்டும் மண் பானை சர்க்கரை பொங்கலுடன், கள்ளம் கபடமில்லா மனிதர்களுடன் கொண்டாடுவது சொர்க்கம் தான்!
"இனிய பொங்கல் தை திருநாள் வாழ்த்துக்கள்"
உங்கள் வாழ்வில், சர்க்கரை பொங்கலென மகிழ்ச்சி பொங்கி வழியட்டும்.
மேலும் விபரங்களுக்கு, குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின், லோஹிரி, பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை பற்றிய உரைகளை படியுங்கள்.
இதில் சில குறிப்புகள், பாரத் ஞான் அமைப்பின் நிறுவனர், D .K . ஹரி , மற்றும் ஹேமா ஹரி அவர்களின் நூல்களில் இருந்து எடுக்க பட்டவை.
மேலும் விபரங்களறிய @bharathgyan , ட்விட்டர் இல் தொடர்க.
இந்த கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை @artofliving இல் பதிவிடுக.