நீங்கள் உங்கள் மனதாலேயே முழுவதும் ஆக்கப் பட்டு, ஆனால் எங்கிருந்தோ சந்தேகம் என்னும் மேகம் தோன்றி, அது விலகாமல் இருந்ததை போன்று உணர்ந்திருக்கின்றீர்களா? அத்தகைய சந்தேகங்கள் நீரில் நமது உருவத்தினையும் பிற அனைத்தையும் கலங்கிய பிரதிபலிப்பைக் காட்டும் நீர்க்குமிழிகள் போன்றவை, ஆனால் அந்த நீர்க்குமிழிகள் மறைந்தவுடன் அனைத்துமே தெளிவாகத் தெரியும்.
அத்தகைய கலங்கலில்லாத தெளிவான மன நிலையினை அடைய முடியுமா? அல்லது அது வெறும் கனவா? அதிர்ஷ்ட வசமாக சீரான தியானத்தின் மூலம் அது நிச்சயம் முடியும். தியானம் ஓர் காலப்பரீட்சையைக் கடந்த நுட்பம். அது எண்ணக் காட்டிற்குள் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு வெளி வர வழி காட்டும் அறிவிப்புப் பலகையாகும். இந்தக் கண்ணுக்குப் புலப்படாத சக்தி சந்தேக நீர்க்குமிழிகளை உங்கள் மனதில் சீரமைத்து, நீங்கள் என்ன எண்ணுகிறீர்களோ என்ன செய்கிறீர்களோ அவற்றில் தெளிவினை ஏற்படுத்துகின்றது. எவ்வாறு தியானம் நமது எண்ணங்களின் தரத்தினை மாற்றியமைக்க முடியும்? அதன் பின்னர் உள்ள அறிவியல் என்ன? கீழ்க்கண்ட பகுதிகளில் அவற்றினைக் கண்டறிவோம்.
#1 தியானம் அமைதியுணர்வைத் தூண்டுகிறது
"குழப்பமாக உணரும்போது ஒருதலையணையை எடுத்துக் கொண்டு படுக்கைக்குச் செல்லுங்கள்" என்னும் இந்தச் சீனப் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குழப்பமான மனதைத் தூக்கம் அமைதிப்படுத்தும் என்பதை ஒருவேளை அவர்கள் அறிந்திருக்கக் கூடும். ஆனால், தியானம் இந்த அமைதி நிலையினைப் பெருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தியானம் செய்யும்போது உடலின் ஆக்சிஜென் தேவை, 10 முதல் 20 சதவீதம் குறைகிறது, தூக்கத்தின்போது 8 சதவீதம் மட்டுமே குறைகிறது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? குறைந்த ஆக்சிஜென் தேவை அமைதியின் அதிக அளவினைக் குறிக்கும். அது நமது உடலுக்கு மிகவும் தேவையான ஓய்வினை அளிக்கின்றது. அமைதியற்ற அலைபாயும் மனதை விட அமைதியான மனம் தெளிவாக சிந்திக்கும் ஏனெனில் அது எங்கும் சிதறுவதில்லை.
#2 தியானம் நமது அமைப்பின் ஆற்றலை அதிகரிக்கின்றது
முந்தைய குறிப்பில் தியானம் ஆற்றலை அதிகரிக்கும் என்று கூறினோம். அவ்வாறு நிகழும்போது, அனைத்து சந்தேகங்களும் குழப்பங்களும் விலகி, தெளிவான மனதிற்கு வழி வகுக்கின்றன. நீங்கள் வருத்தமாகவோ சோர்வாகவோ இருக்கும் போது மனம் தெளிவாக இருப்பதில்லை என்பதைக் கவனித்திருக்கின்றீர்களா? சந்தோஷமாக இருக்கும்போது என்ன செய்ய வேண்டுமோ அதை நன்கு அறிந்திருந்தீர்கள் என்பது நினைவிருக்கிறதா? உங்கள் மனதைத் தெளிவாக வைத்திருப்பது என்பது ஜன்னலை தூசியில்லாமல் துடைத்து வைத்துக் கொள்வது போன்றதாகும். சந்தோஷமாக இருக்கும்போது சரியான பார்வையும் உணர்வும் இருக்கும். உங்கள் ஆற்றல் அளவு அதிகமாக இருக்கும்போதுதான் அவ்வாறு நிகழ முடியும். இந்த வழியில் தியானம் உங்கள் ஆற்றலின் பெரும்துணை என்று கருத முடியும். தூசி சந்தேகத்தைப் போன்றது. சுத்தமான ஜன்னல் தெளிவான மனம் போன்றது. அது நமது செயல்களின் பிரதிபலிப்பாகும். இதை சில நிமிட நேர தியானத்தில் அடையலாம்.
#3 தியானம் உங்களைக் கவனமுள்ளவராக்கும்
நீங்கள் மிகக் கவனத்துடன் பணிபுரிந்ததாக உணர்ந்ததை கவனித்திருக்கின்றீர்களா? அந்த சமயங்களில் நீங்கள் அதிக ஆற்றலுடன் பணி புரிந்திருக்கின்றீர்கள். அது ஏனெனில் உங்கள் கவனம் வீணான விஷயங்களில் சிதறவில்லை. நமது மனம் நினைத்தல், பகுப்பாய்தல் மற்றும் விளக்குதல் இவற்றினைச் செய்யும் கணினியின் அணுகல் நினைவகம் (RAM) போன்றது. அதிகமான செயல்முறைகள் (எண்ணங்கள்) கணினியின் பின்னகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதிக முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகள் வேகம் குறையும். இது கிட்டத் திட்ட நமது அலைபாயும் மனதினுக்கு ஒப்பானது. தியானம் தேவையில்லாதவற்றை மூடி விடுவதற்கு உதவுகின்றது. உங்கள் மனதில் வீணான இரைச்சலிடும் எண்ணங்களை விலக்கித் தெளிவாக்குகின்றது. அதனால் தெளிவாகச் சிந்தித்து முடிவுகளை எடுக்க முடிகிறது.
#4 தியானம் கூர்நோக்கு, அறிவு, மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துகின்றது
வெளியுலகத்திற்கு உங்கள் கண்களே ஜன்னல்கள் என்பதை நீங்கள் சந்தேகமின்றி அறிவீர்கள். உங்கள் கண்ணில் தூசிப்புள்ளிகள் இருந்தால் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியுமா? அது போன்று, உங்கள் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் இருந்தால் உங்களால் விஷயங்களைத் தெளிவாக கவனித்துப் புரிந்து கொள்ள முடியுமா? நமது மனதில் கோபம், வெறுப்பு, பொறாமை, பேராசை, பயம், அல்லது வருத்தம் போன்ற உணர்ச்சிகள் சூழ்ந்திருக்கும்போது நாம் நம்மையும் பிறரையும் சந்தேகிக்கத் துவங்குகிறோம். தியானம் நம்மை மைய நிலையில் வைப்பதால் எந்த உணர்ச்சிகளும் நம்மைத் தொல்லை செய்யாமல் இருக்கின்றன.
அதே சமயம், உள்ளும் புறமும் உள்ள உலகினைக் கூர்ந்து காணும் திறனை மேம்படுத்துகின்றது. நாம் என்ன உணருகிறோம், பிறர் நம்மைப் பற்றி என்ன உணருகின்றார்கள் என்பதைக் கவனிக்க முடிகிறது. நம்மை நாமே கவனிக்க முற்படும்போது, நமது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை நம்மால் கையாள முடிகிறது.தெளிவான கவனம் என்பது, நிலைமையை சரியான புரிந்து கொண்டு நமது முடிவுகளை தவிர்க்க இயலாத வகையில் பாதிக்கும் நல்லது கெட்டதைப் பாகுபடுத்தியறியும் திறனை அளிக்கிறது.
சந்தேகமின்றி, நமது தொடர்புத் திறனையும், மேம்படுத்தி நமது தொடர்பின் உள்ளடக்கத்தை வளமாக்குகின்றது. உங்கள் கவனமும் அறிவும் தெளிவாக இருந்தால், எதை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
#5 தியானம் தெளிவான மனநிலையை நீண்ட காலத்திற்குத் தக்க வைக்கின்றது
எவ்வாறு தியானம் நமது மனதில் குப்பைகளை அகற்றி, நமக்கு புரிதல், சிந்தித்தல், மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் தெளிவினைத் தருகிறது என்று புரிந்து கொண்டோம். இதை எவ்வாறு நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதும் அவசியம் ஆகும். அது நாம் தினமும் ஒழுங்காக தியானம் செய்து வந்தால் நிகழும். காலை வேலை தியானத்திற்கு சிறந்த நேரம். ஏனெனில், அதிகக் குழப்பங்கள் இன்றி நாம் ஆழ்ந்து தியானம் செய்ய முடியும். தினமும் தியானம் செய்வது நமது ஆற்றலை அதிக அளவில் நீட்டித்து வைக்கும். .நாம் சாதரணமாக கஷ்டமான சூழ்நிலைகளில் இழந்து விடும் அமைதியான மனநிலையை எப்போதும் இருக்கச் செய்யும். அது மட்டுமல்ல, நாம் சந்தோஷ சூழ்நிலையைக் கடக்கும்போதும், நம்மை ஸ்திரமாக இருக்க வைக்கும். தியானத்தின் பலன்கள் மிக அதிகமானவை.