பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை
விருப்பம் என்பது என்ன? உங்களுக்குக் கற்பிக்கப் பட்டிருக்கும் அனைத்தையும் அந்த சொல் குறிக்கின்றது, ஆயினும் தெரிந்தோ தெரியாமலோ அந்த வார்த்தை உங்கள் கண்களில், மனங்களில் இதயங்களில் ஆடிக் கொண்டிருப்பதை அறிகிறீர்கள். உங்களில் பெரும்பான்மை யானவர்களுக்கு விருப்பத்தின் விளையாட்டு, உங்களை உங்களிடமிருந்தே பிரித்து விடும் என்பதும் ஒரு வேளை தெரிந்திருக்கும்.
உங்களுடைய மனதில் நிறைவு பெறாத விருப்பம் இருக்கும் வரையில், உங்களால் நிம்மதி யாக இருக்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ண பகவான், பகவத் கீதையில், " உங்கள் ஆசைகளை அல்லது பெரு விருப்பங்களை துறக்காத வரையில் யோக நிலையினை ( ஆத்மாவுடன் இணைதல்) அடைய முடியாது என்று கூறுகின்றார்.. ஒவ்வொரு ஆசையும் கண்ணில் விழும் மணல் துகளைப் போன்றது. அந்த மணல் துகளுடன் கண்ணை மூடவும் முடியாது, திறக்கவும் முடியாது இரண்டுமே கஷ்டமாக இருக்கும். சாந்தம் என்பது இந்த மணல் துகளை நீக்குவது போன்றது, அப்போது உங்களால் கண்ணைத் திறக்கவும் மூடவும் முடியும். மற்றொரு வழி, உங்கள் ஆசையை விரிவாக்கிக் கொள்வது, அல்லது பெரிதாக்கிக் கொள்வது. அப்போது அது உங்களைத் தொல்லைப் படுத்தாது. மிகச் சிறிய மணல் துகளே உங்கள் கண்களை எரிச்ச லாக்கும், ஒரு பெரிய பாறை உங்கள் கண்களுக்குள் புகவே முடியாது !
பல்லாண்டு காலமாக சான்றோர் சாந்தம் மற்றும் ஆசைகளை விட்டு விடுவதன் தேவை ஆகியவற்றைப் பற்றிப் பேசியிருக்கின்றனர். அப்படிஎன்றால், நீங்கள் முற்றிலும் விருப்பங்களைத் துறப்பதற்கான அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பொருளாகுமா? விருப்பங்களைத் துறக்கும் தேவையே ஒரு விருப்பமல்லவா? உங்கள் ஆத்மாவிலிருந்து விருப்பங்களை வெளியேற்றும் போது உங்கள் உடலினை இறுக்கமாக்கிக் கொள்கின்றீர்கள்.
விருப்பதை விட்டு விட, அதை நீங்கள் இதயபூர்வமாக அணைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனம் எதை உணர்ந்தறிகிறதோ, உங்கள் இதயம் எதை விரும்புகிறதோ அதை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த க்ஷணத்தில் உங்கள் மனதில் ஒரு ஆசை ஏற் பட்டால் என்ன செய்கிறீர்கள்? அதை நிறைவேற்றிக் கொள்ள செயல் படுகின்றீர்கள். அது நிறைவேறியவுடன், நீங்கள் எங்கிருக்கின்றீர்கள் தெரியுமா? ஆசை ஏற்பட்ட போது எங்கிருந்தீர்களோ அங்கேயே, அது உங்களை எடுத்துச் செல்கிறது.
எனவே, இந்தத் தேடல் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். எதை அடைய விரும்புகிறீர்கள்? விருப்பமே இல்லாத நிலையையா அல்லது விருப்பத்தினைக் கடக்கும் நிலையையா? ஒரு இளம் பெண், அழகான விலையுயர்ந்த ஆடையினைக் காணும்போது, உடனடியாக அதன் மீது விருப்பம் கொள்கிறாள். ஆனால் எல்லா அழகான பொருட்களையும் போன்று அதுவும் விலையுயர்ந்ததாக இருப்பதால் அதை வாங்க முடிய வில்லை. எனவே அவள் தன்னுடைய தந்தையிடம், அந்த ஆடையின் விலையின் மதிப்புக்கு அது தகுந்ததே என்று அனைத்து வழிகளிலும் அவரை நம்ப வைக்க முயல்கின்றாள். ஆனால் தந்தை மறுத்து விடுகிறார். அப்பெண் மிக வருத்தமடைந்து, எந்த விருந்து அல்லது விழாவிற்குச் சென்றாலும், அந்த ஆடை கிடைக்காத குறையினை உணர்கின்றாள். அழகான எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அந்த ஆடையின் நினைவில், தன்னைப் பற்றிக் குறையுடன் இருக்கின்றாள். கடையின் முகப்பில் அந்த ஆடையினைக் காணும்போதெல்லாம், அவள் இதயம் துடிக்கின்றது. ஏராளமான அழுகை, சண்டை, கூச்சல் இவற்றுக்குப் பின்னர் அவள் தந்தை இறுதியாக அந்த ஆடையினை அவளுக்கு வாங்கித் தருகின்றார். அப்பெண் மிக மகிழ்ச்சி யடைகின்றாள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், விருந்துக்கும் அதையே அணிந்து செல்கின்றாள். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பின்னர் அதே ஆடை உபயோகமின்றி கிடக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அதே ஆடை பணியாளுக்குத் தரப்பட சேர்க்கப் பட்டிருக்கும் பழைய துணிக் குவியலில் ஒன்றாகக் கிடக்கின்றது.
ஆகவே , மேலோட்டமான பகுத்தறிவில் விருப்பம் ஒரு பெரிய உருவெடுப்பதையும், இறுதி யில் ஒன்றுமில்லாமல் போவதையும் காண்கிறீர்கள். எனவே, இதை எவ்வாறு கையாள்வது? விருப்பங்கள் நிறைவேறுவதைப் பற்றி அதிக மதிப்புக் கொடுக்காதீர்கள். அதனுடன் சண்டையிட்டு, அதை உங்களது அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று எண்ணாதீர்கள். விருப்பங்களின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு கிடையாது. அவை வரும். அவற்றைப் பிடித்து வைத்துக் கொண்டு பகல் கனவு காண்பதை விட, அவற்றை விரும்பிக் கொடுத்து விடுங்கள். முழுமையான உருவில் அவற்றை ஒப்படைத்து விடுங்கள். இந்த செயல் முறைதான் சன்யாசம். உங்களுக்குள் எழும் அனைத்தையும் ஒப்படைத்து விடும்போது எதுவும் உங்களை நடுநிலையிலிருந்து அசைக்க முடியாது. இல்லையெனில், சிறிய விஷயங்கள் கூட உங்களை அசைத்து, நீங்கள் துன்புறுவீர்கள்.
இங்குமங்குமாக ஒரு சில சொற்கள் கூட உங்களை துன்புறுத்தும். ஒவ்வொரு நிகழ்விலும் போகட்டும் விடு என்று வாழும் கலையினை வாழ்க்கை உங்களுக்குக் கற்றுத் தருகிறது. எவ்வளவுக்கெவ்வளவு போகட்டும் போ என்று விட்டு விடுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு சந்தோஷமாக இருப்பீர்கள். மகிழ்ச்சியுடன் இருக்கத் துவங்கும்போதே நிறைய உங்களுக்கு அளிக்கப் படும். ஆசைகளை நன்றாகப் பார்த்து, அவை பயனற்றவை என்று உணர்ந்தறிதல் தான் முதிர்ச்சி அல்லது பாகுபடுத்தியறிதல்.
சரணாகதி என்பது என்ன? ஒரு ஆசை தோன்றும்போது, அதை ஒப்படைத்து விட்டு " இது நல்லதாயின் இது நடக்கட்டும்" என்று கூறி விட்டு விடுதல். அவ்வாறு விட்டு விடும் போது உங்களுக்கு சுதந்திரம் அதிகமாகின்றது. அந்த சுதந்திரத்தில் சந்தோஷம் மட்டுமே இருக்கின்றது. பின்னர் அனைத்தும் இயற்கையாகவே ஓர் மொட்டு மலர்வது போன்று மலர்ந்தெழுகின்றன.
ஆனால் சரணடைதல் என்பது செயலற்ற நிலை அல்ல. சரி எனக்கு வேலை கிடைத்து விடும் என்று விருப்பம் உறுதியடைந்து விட்டதாக எண்ணிக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது அல்ல. செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும். உங்கள் முழு செயல்திறனையும் பயன்படுத்துங்கள். எதை அடைய விரும்புகிறீர்களோ அதற்கு உங்கள் கர்மம் முக்கியமானது. எப்போதும் செயல்படுங்கள், ஆனால் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்னும் படபடப்புடன் இருக்காதீர்கள் ஏனெனில், அதுதான் மனசோர்வுக்கு மூல காரணம். செயல்பட்டு, சரணடைந்து, சுதந்திரமாக இருங்கள்.
சாந்தத்தின் மூலம், இந்த உலகினை நீங்கள் நன்கு அனுபவித்து இளைப்பாறலாம். சாந்தம் உங்கள் வாழ்வில் ஆனந்தத்தை எடுத்து வரும். சாந்தம் என்பது உணர்ச்சியின்மை என்று எண்ணாதீர்கள். சாந்தம் முழுமையான நிறைந்த உற்சாகமான நிலை. அது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை அளித்து, உங்களை நன்றாக ஓய்வெடுக்க அனுமதிக்கும்.